Sunday, December 20, 2009

என்னாச்சு......... ஒண்ணுமில்லை

இது நான் மட்டும் இல்லை பெரும்பாலும் எல்லா பெண்களும் சொல்லும் வார்த்தை. ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டு அப்புறம் ரெண்டு மணி நேரம் எதாவது பிரச்சனைய பத்தி பேசுவோம்னு பெண்களைப் பதிப் பேசுவாங்க. நாங்க ஏன் ஒண்ணுமில்லைன்னு சொல்றோம். இதை இங்கே பார்போம்.

அவள்: ஹலோ. நான் உங்கள் ஆபீஸ் வாசல்கு வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு
(இப்ப எல்லாம் பசங்க பெண்களுக்காக காத்திருப்பதில்லை.)

அவன்: இதோ வந்துட்டேன். அங்கேயே இரு.

இன்னும் பத்து நிமிஷம் கழித்து

அவள்: இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். செக்யூரிட்டி என்னை துரத்திகிட்டே இருக்கான்.

அவன்: இதோ வந்துட்டறேன்.

இன்னும் பத்து நிமிஷம் கழித்து வெளியே வருகிறான்

அவன்: நான் என்ன பண்றது. களம்பற நிமிஷம் தான் எல்லா வேலையும் வரது.

நம்ம பேச ஆரம்பிப்பதற்குள் இவங்க எதாவது சத்தமா சொல்லிடுவாங்க. அதை நம்ம அப்படியே கேட்டுக்கணும்

இருவருமாய் அருகில் இருக்கும் Coffee Day செல்கிறார்கள்.

அவன்: என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க?

அவள்: ஒண்ணுமில்லை

அவன்: ஒண்ணுமில்லைனாலே ஏதோ இருக்குனு தான் அர்த்தம். சொல்லு

அவள்: சொன்னா என்ன பண்ணபோறீங்க

அவன்: முதல்ல சொல்லு

அவள் ஏதோ அலுவலகத்தில் இருக்கும் பிரச்சனை பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாள். சரியாக ஐந்து நிமிஷம் கழித்து

அவன்: இதோ அந்த பொண்ணை பாரேன். எவ்வளவு நீளமா அழகா முடி இருக்கு. பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.

அவள்: நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ எங்க கவனிக்கிற

அவன்: நான் கேட்டுக்கிட்டே தான் இருக்கேன். அப்புறம் என்ன ஆச்சு

அவள் திரும்பவும் சொல்ல ஆரம்பிக்கிறாள். சரியாக முன்று நிமிஷம் கழித்து

அவன்: இனிமே நம்ப இங்க வர வேண்டாம். ஒரு காபிக்கு நூறு ரூபாய் கிட்ட ஆகுது. உடம்புக்கு வேற இதெல்லாம் நல்லது இல்லை.

அவள்: ரொம்ப முக்கியம் இப்ப. எனக்கு ஒரு பதில் சொல்லு.


அவன்: நீ என்ன சொல்லிட்டு இருந்த. ஆரம்பத்திலிருந்து சொல்லேன் நடுவுல கொஞ்சம் கவனிக்கலை

அவள்: அவனை திட்டிவிட்டு மறுபடியும் ஆரம்பிக்கிறாள். சரியாய் இரண்டு நிமிஷம் கழித்து

அவன்: இது என்ன கருப்பு கலர்ல நைல் பாலிஷ் போட்ருக்க புள்ள பிடிக்கிறவன் மாதிரி இருக்கு.

அவள்: உன்னை என்ன பண்றதுனே தெரியல. நான் எவ்வளவு முக்கியமான விஷயம்ப் பத்தி பேசறேன்.

அவன்: உன் ஆபீஸ் பிரச்சனைக்கு நான் என்ன பண்ண முடியும். நீ தானே பார்த்துக்கணும்

அவள்: அதுக்கு தான் நான் ஒண்ணுமில்லைன்னு முதல்லியே சொன்னேன். நீ தான திரும்பவும் கேட்ட

அவன்: சரி நான் கேட்டுட்டேன். இப்ப வேற எதையாது பத்தி பேசலாம். புதுசா என்ன சமைக்க கத்துக்கிட்ட?

அவள் அவனை அசிங்கமாக திட்ட ஆரம்பிக்கிறாள்...........................
இதுக்கு தான் ஒண்ணுமில்லைன்னு முதல்லியே சொல்றோம். நீங்களா நோண்டி கேக்க வேண்டியது.அப்புறம் நீயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல வேண்டியது. எங்களையும் திட்ட வேண்டியது

இதில் வரும் அவனும் அவளும் யாரோ இருவர்கள்.

Wednesday, December 16, 2009

பிரிந்தோம்..... மீண்டும் சிந்திப்போம்

யார்யாரோ பிரிகையில் திரும்பிக் கூட
பார்க்காத இதயம்
மண்டியிட்டு அழுகிறது நீ சென்ற
தடம் பார்த்து
*************************************************************************************
எழுதி கிழித்தக் கடிதங்களும்
அனுப்பாமல் அழிக்கும் தகவல்களும் சொல்லும்
உன்னை அழைக்க முடியாமல் அழுவதை
*************************************************************************************
அடித்த அன்னையிடமே சமாதானமாகும்
குழந்தைப் போல் காத்திருக்கிறேன்
காயப் படுத்திய நீயே மருந்து போட
*************************************************************************************
தூறல் விழுந்தால் கூட உன் விரல்
வெப்பம் பழகிய நான்
புயலில் செல்ல இடமின்றி தவிக்கிறேன்
காற்றில் பறக்கும் சிறகாய்
*************************************************************************************

Thursday, December 10, 2009

எனக்குள்................

அழுகையை அடக்கிக் கொண்டு
பொய்யாய் புன்னகைக்கும் போதும்

சொல்ல நினைக்கும் வார்த்தைகளை சொல்லாமல்
எதையோ சொல்லும் போதும்

"எனக்கு அக்கறை இல்லை" என்று சொல்லி
கவலைப் பட்டுக்கொண்டு இருக்கும்போதும்

அனைத்தும் தெரிந்தும் "என்ன ஆச்சு?"
என்று கேட்க நேரும் போதும்

நம்பிக்கை இல்லாத ஒன்றை
ஊருக்காக செய்யும் போதும்

எனக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில்
தோர்த்து அடிபணிகிறேன் யாரிடமோ

Monday, December 7, 2009

தேடுங்க தேடுங்க தேடிக்கிட்டே இருங்க

நம்ம எல்லார் வீட்லயும் எதாவது சில பொருட்கள் தொலைந்து அதை தேடுவதற்கே பாதி நேரம் போகும். தொலையும் பொருட்கள் பெரும்பாலும் இதில் எதாவது ஒன்றாக தான் இருக்கும் ஐடென்டிடி கார்டு, வண்டியின் மாற்று சாவி , நாம் வாங்கிய பொருட்களின் வாரண்டி/காரண்டி கார்டு, கண் பரிசோதனை கார்டு, ரயில் டிக்கெட், தோடு திருகாணி மற்றும் சில. தேடுவதை எப்படி சுவாரசியமாக்குவது என்று பார்ப்போம்.

தேடுவதென்பது ஒரு டீம் வொர்க். அதை பகுதி பகுதியாய் பிரித்து செய்ய வேண்டும். ஒருவர் அலமாரி, ஒருவர் டிவிக்கும் அதன் மேல் கவுருக்கும் அடியில் இருக்கும் பகுதி இந்த மாதிரி பிரிக்க வேண்டும். ஒரு முறை மட்டும் ஒரு இடத்தை தேடினால் போதாது. மீண்டும் ஒருவர் தேடி அந்த இடம் சரியாக தேடப்பட்டுள்ளதா என்று ரெவியு செய்ய வேண்டும்.

பொருட்களை பொறுத்து அதை தேடும் விதம் அமையும். தோடு திருகாணி தொலையும் பொது தரையில் குப்பறப் படுத்து எல்லா திசைகளிலும் பார்த்து தேட வேண்டும். இதில் சோபா மற்றும் கட்டில்அடியில் கவனமாக பார்க்க வேண்டும். ரயில் டிக்கெட் தேடும் பொது அலமாரியில் இருக்கும் எல்லா காகிதத்தையும் கீழே தள்ளி விட்டு பிறகு ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்க வேண்டும். உயரமான ஆட்களுக்கு அலமாரி மேல் தட்டு, ஒல்லியான ஆட்களுக்கு கட்டிலுக்கு கீழ் என்று டீம் அல்லாட் செய்ய வேண்டும்.

தேடுவதற்கு என்று ஒரு டீஷிர்ட் தயார் செய்யலாம். 'Search team of the house', 'Power of Searching','You lose, We search' இந்த மாதிரி எதாவது ஸ்லோகனை பயன்படுத்தலாம். தேடும் நேரங்களில் அந்த டீஷிர்ட் அணிந்து கொண்டு தேடினால் டீம் ஸ்பிரிட் நன்றாக இருக்கும். தேடுவதற்கு முன் இந்திய கிரிக்கெட் அணி செய்வது போல எல்லாரும் வட்டமாக நின்று கட்டிபிடிக்க வேண்டும். தொலைந்த பொருளை தேடி எடுத்தவருக்கு 'Star searcher of the house' என்ற அவார்ட் கொடுத்து உற்சாகப் படுத்துவது முக்கியம் .தேடிய பொருள் கிடைத்த உடன் அதை வைத்துக் கொண்டு டீம் போட்டோ எடுத்துக் கொண்டு அதை வீட்டில் மாட்ட வேண்டும்.தேடுதலை உற்சாகப் படுத்த டீம் லஞ்ச், டின்னர் சென்று பாண்டிங் இம்ப்ரூவ் செய்வது முக்கியம்

வெற்றிகரமாக தேடி முடித்தப்பின் எங்கு எந்த பொருள் கிடைத்தது என்று ஒரு எக்ஸ்செல் ஸீட்டில் குறித்து வைக்க வேண்டும். உதாரணமாக ரயில் டிக்கெட் இரண்டு பால் கார்டுக்கு நடுவில் நான்காக மடித்து இருந்தது. இவ்வாறு செய்து ரூட் காஸ் அனாலிசிஸ் அதாவது ஏன்
பொருள்கள் தொலைகிறது என்று யோசிக்க வேண்டும்.

சரி நானும் போய் என் எக்ஸாம் ஹால் டிக்கெட் தேடி விட்டு வருகிறேன்

Sunday, November 22, 2009

Rewind

இப்ப சில மாதங்களாய் கல்லூரி தோழி ஒருத்தி என் அலுவலகத்திலே பணிபுரிவதாலும் ,
தனிமை நேரங்கள் அதிகரிப்பதாலும் ரொம்பவே அசை போடுகிறேன் கல்லூரி நாட்களை. நிறைய விஷயங்கள் செய்ய ஆரம்பிச்சது கல்லூரி நாட்களில் தான்.

எங்க குடும்பம் நான் பத்தாவது படிக்கச்சே சென்னை வந்தாலும் எனக்கு என் கல்லூரி நாட்கள் வரை சென்னையில் அதிகமாய் எந்த இடமும் தெரியாது. கல்லூரி நாட்களில் ஊர் சுத்தும் பொது தான் சென்னையை முழுவதுமாய் தெரிஞ்சுக் கொள்ள முடிஞ்சது.

நான் கவிதை எழுதறேன்னு சொல்லி கிறுக்க ஆரம்பித்தது கல்லூரி நாட்களில் தான். நிறைய கவிதை புத்தகங்களை படிச்சது, மற்றும் ஒருவரின் மீது கொண்ட ஒரு தலை காதல் தான் இதற்கு முக்கிய காரணம். அப்ப என் நோட் புக்ஸில் பாட சம்மந்தமான விஷயங்களை விட, கவிதை தான் நிறைஞ்சு இருக்கும்.

அதுக்கு அப்புறம் நான் இரு சக்கிர வாகனம் ஓட்ட ஆரம்பிச்சது கல்லூரிக்கு போவதற்கு தான். அதுக்கு முன்பு வாகனம் ஒட்டவே தெரியாது. எங்க வீட்டிலிருந்து கல்லூரிக்கு போக சரியாய் பேருந்து வசதி இல்லாததால் தான் விழுந்து வாரி வண்டி ஓட்ட கத்துண்டேன். அப்படி ஒரு முறைஎருமை மாட்டின் மீது வண்டி மோதி அடிபட்ட நேரம் தான் எனக்கும் ராஜிக்கும் நட்பு ஆரம்பமாச்சு.

டைரி எழுதும் பழக்கம் உருவெடுத்ததும் இந்த நாட்களில் தான். அதுக்கு முன்னாடி டைரில
என்ன எழுதறது , எழுதியதை யாராவது படிச்சா என்ன ஆகும் இத நினைச்சே ஒன்னும் எழுத மாட்டேன். அந்த வருடங்களின் டைரிகளை வெச்சே நாலு தமிழ் படம் பண்ணலாம். நட்பு, காதல், உலகம் புரிதல், ஏமாற்றம் இப்படி பல விஷயம் அதுல உள்ளடக்கம்.

Saturday, November 21, 2009

எதிர்த்துப் பேசுவேன்

First impression is the best impression: இதில் என்னவோ என்னக்கு உடன்பாடு இல்லை.பொதுவாய் முதலில் ஒருவரை பார்க்கும் போது நாம்(முக்கியமாக நான்) நாமாய் இருப்பது இல்லை.ஒருவரோடு தொடர்ந்து பழகும் போது தான் அவரின் சுயரூபம் அறிகிறோம். ஆளை பார்த்துஎடை போடுவதில் நாம் எப்போதும் தவறி இருக்கிறேன்
Desire is the rootcause of all evils: என்னை பொறுத்தவரை ஆசை இல்லாமல் நாம்எல்லாம் ஒரு மரக்கட்டைக்கு சமானம். நியாமான வழியில் ஆசையை அடைவதில் என்ன தீமைஇருக்கிறது
Silence is Golden: மௌனங்களை நாம் வெவ்வேறு வகையில் மொழிபெயர்க்கிறோம். இப்போது ஒருபொருள் தந்து பிறகு வேறு பொருள் தரும் மௌனத்தை விட வார்த்தைகளே சிறந்தது.

Tuesday, August 11, 2009

நிச்சியதார்த்தம்

கனவால் கழுவப்பட்ட கண்கள்
புன்னகை நிறைந்த உதடுகள்
ஆசையால் கிள்ளப்பட்ட தேகம்
ஆனந்தத்தில் கூத்தாடும் இதயம்

முதல் மாலையை சுமக்க
போகின்றன என் தோள்கள்
எனக்கான முதல் மேடையை
சந்திக்கப் போகின்றன என் கால்கள்


இன்றோடு முடிந்தன
என் தனிமை தினங்கள்
காதலில் நகரப் போகின்றன
இனி என் நாட்கள்

எதிர்பார்ப்புகள் எட்டி பார்க்க
தொடங்கியது திருமண நிச்சயதார்த்தம்
இனிதாய் ஆரம்பமானது என்
வாழ்வின் இரண்டாம் அத்தியாயம்

Thursday, August 6, 2009

கேள்விகளும் நானும்

*1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?*

பிறந்த ஊர் கும்பகோணம். கும்பகோணத்தில் இருக்கும் உப்பிலியப்பன் கோவில தாயார் பெயரான பூமா எனக்கும் வைக்க பட்டது.

உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?*

அவ்வளவா பிடிக்காது

2. கடைசியாக அழுதது எப்பொழுது?*

நேற்று பொதுவா நிறைய அழுவது கிடையாது. ஆனா நிறைய பிரச்சனைகள் உண்டு. நேற்று எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து அழுதேன்

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?*

பிடிக்காது. ரொம்ப மோசமா இருக்கும்

*4. பிடித்த மதிய உணவு என்ன?*

நிறைய பிடிக்கும். ஆனா அம்மா சமைக்கிற ரசமும் கீரையும் ரொம்ப பிடிக்கும் *5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?*

அப்படி இல்லை. சில நபர்களிடம் அப்படி செய்து இருக்கிறேன். அந்த நட்பும் நல்லபடியாய் நிலைத்து இருக்கிறது

*6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?*

கடலில் கால் நனைததுண்டு. அது ரொம்ப சுகமா இருக்கும். அருவிய பார்க்க பிடிக்கும்

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?*

அதிகம் சிரிக்கிறாரா இல்லையா என்று. அதிகம் சிரிப்பவரை நம்புவது இல்லை.

8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன? *

பிடித்தது: நான் எதை ஏன் செய்கிறேன் என்கிற தெளிவு உண்டு. அதிகமாய் உடைந்தது இல்லை. முடிந்தவரை ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

பிடிக்காதது: நிறைய உண்டு. சில சமயம் சில மனிதர்களிடம் உண்மையை பேச முடியாமல் தயங்குவது. சில நபர்களை பார்த்தாலே வரும் கோபம். சில சமயங்களுக்காக வேஷம் போடுவது

*9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?*

மிகவும் தெளிவாய் யோசிப்பது

*10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?*

அப்படி யாருககவும் வருந்தவில்லை

*11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?*

நீலம்

*12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?*

நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?

எப்போதுமே கருப்பு தான் பிடிச்ச கலரு

*14. பிடித்த மணம்?*

மண் வாசனை. வறுக்கும் காபி வாசம். புதிய பேப்பர் வாசம் இந்த மாதிரி நிறைய

*15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?*

என் தோழி அருணா. எதையும் அலசி பார்ப்பாள். காரணம் வைத்து கொண்டு நாங்கள் அழைப்பதில்லை காரணம் இல்லாமல் அழைத்து நீ சொல்லு நான் சொல்லு என்று ஊர் கதைகள் பேசுவோம் ராஜி. சில நாட்களை அவளுக்கு கொஞ்சம் பிரச்சனை. அழைக்க போவது சினமாவுக்கு போகலாமா என்று கேட்க
*16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு*

அதிகமாய் பழக்கமில்லை என்றாலும் அவங்க கவிதைகள் ரொம்ப பிடிக்கும் 17. பிடித்த விளையாட்டு?*

சீண்டி பார்ப்பது

*18. கண்ணாடி அணிபவரா?*

ஆமாம் ஆறு வயதிலிருந்து அணிகிறேன்

*19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?*

அதிக ஆர்பாட்டம் இல்லாமல் யதார்த்தமாய் இருக்கும் படங்கள் பிடிக்கும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?*

நாடோடிகள்

21. பிடித்த பருவகாலம் எது?*

மழை காலம் தான்.

*22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?*

master detective என்னும் புத்தகம்

*23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?

நல்ல படங்கள் கிடைத்த உடன் மாற்றி விடுவேன்

24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?*

பிடித்தது பறவைகள் சத்தம். அப்புறம் ராத்திரில அமைதியா ஒலிக்கிற பாடல் சத்தம்

பிடிக்காதது:அந்த சைனீஸ் படத்தை தமிழ்ல மாத்தி அதுல அவங்க பேசற சத்தம்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

லண்டன்

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?*

இருக்கே. அது என்னனு தான் இன்னும் தெரியல

*27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?*

பொது எடங்களில் குப்பை போடுபவர். குறிப்பை பேருந்து மற்றும் ரயில்களில். வரிசையில் நிற்காமல் அடுத்தவர்களை விட்டு டிக்கெட் வாங்கி தர சொல்லுபவர்கள்
*28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?*

எல்லாரிடத்திலும் தப்பு கண்டு பிச்சு மனசிலயே வெச்சுக்கும்

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?*

கேரளா போக வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை

*30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?*

எப்பவும் சிரிச்சிண்டு இருக்கணும், எப்பவும் எதாவது வேலை செஞ்சுண்டே இருக்கணும்,

*31.கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?*

இதுவரை அப்படி யாரும் இல்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

நிறைய சமயம் பரீட்சை வெச்சுட்டு தான் பாடத்தை சொல்லி தரும்

Wednesday, July 15, 2009

படிச்சதில், கேட்டதில், பிடிச்சது


1) அக்பர் பாபருக்கு மட்டுமல்ல ஒரு சின்ன தக்காளிக்கு கூட தனிச் சரித்திரமிருக்கிறது

துணையெழுத்து என்னும் நூலில் உள்ள வரிகள். படிச்ச உடனே மனதில் பதிந்து விட்டது
2)Yes. But is that your question

நேரடியாய் விஷயத்த கேட்டக தெரியாம எதையோ பேசுகிறவர்களுக்கு இது புரியும்
3) The Best way to predict the future is to invent it

எத்தனையோ இடத்தில படித்தாலும் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் இது
4) முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் முயலாமை வெல்லாது

யாருடைய தனிப்பயன் செய்தி எனபது ஞாபகம் இல்லை. ஆனால் பழைய முயல் ஆமை கதையை வைத்து ஒரு நல்லக் கருத்து
5)காதல் வீட்டின் ஜன்னல் வழி அவ்வபோது எட்டி பார்க்கிறது காமம் இது மிகவும் பிரபலமான ஒருவரின் வரி

Wednesday, July 8, 2009

மழை

நின் தொடுதல் ஒரு மழை போல்
இதமான மாலை வேலையில்
கன்னம் தொடும் சின்ன தூறலாய்
ஒதுங்கி இருக்கும் வேலையில்
தேடி வந்து தொடும் சாரலாய்
எதிர்பார்த்து நிற்கும் போது
சிரித்து விட்டு செல்லும் சிறு மின்னலாய்
***************************************************************************************
நினைய
நினைக்க
தொட
விலக
சிலிர்க்க
சிரிக்க
தேவை ஒரு மழை
************************************************************************************
உன் கைக்குட்டை என் குடையாய் வர
என் விரல்கள் உன் தலை துவட்ட
வாழ்க குடை மறந்த நாட்களில் பெய்யும் மழை
************************************************************************************
மழை வந்ததும்எல்லாரும் ஜன்னல் சார்த்த
நீ மட்டும் ஜன்னல் திறக்க
புதிதாய் ரசித்தேன்
மழையையும் உன்னையும்

டாப் டென்

தப்பாய் எடுத்துகாதிங்க தொலைக்காட்சில டாப் டென் ரொம்ப பார்த்ததோட பாதிப்பு
பத்து
இரவு பத்து மணிக்கு இனிய இரவு வாழ்த்துக்களை அனுப்பிநள்ளிரவுவரை தகவல்களை பரிமாரிக்கொள்ளும் நம் அலைபேசி
ஒன்பது
போனவருட பிறந்த நாளிற்காக நீ பரிசாய் தந்தஒன்பது காதல் கவிதைகள்
எட்டு
பிரிவு தான் காதலை உணர்த்தும் என்று சொல்வார்கள்எனக்கு காதலை உணார்த்திய உன் எட்டு நாள் அலுவலக பயணம்
ஏழு
என் அழைப்பு வந்து தான் நாளை துவக்க வேண்டும் என்றுகாலை ஏழு மணிக்கு முழித்து கொண்டே படுக்கையில் உருளும் நீ
ஆறு
ஆறு சுவையில் ஒரு சுவையும் சரியாய் இல்லாமல்நான் சமைக்கும் போதும்அதையும் ரசிக்கும் நீ
ஐந்து
உள்ளங்கையில் எழுதிக்கொண்டு பலமுறை என்னால்உச்சரிக்கப்படும் உன் ஐந்து எழுது பெயர்
நாலு
ஒன்றாய் கல்லூரியில் படித்த அந்த நான்கு வருடங்கள்
மூன்று
மூன்று முடித்து நீ போட போகும் நாட்களை நினைத்துகனவு காணும் பொழுதுகள்
இரண்டு
பிறக்க போகும் நம் மழலைகளுக்காக நாம்தேர்ந்தெடுத்த இரண்டு பெயர்கள்
ஒன்று
காதலை நீ சொல்ல முடியாமல் தவிக்கஎனக்காய் உன் செடியில் பூத்த ஒற்றை ரோஜா

என் ஜன்னலில் தெரிவது நிலவு தானா?

விரைவில் ஆரம்பம்.